08 September 2011

தனியுடமை


பள்ளியில் படிக்கும்போது
பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதால்
அந்த மாணவர்களைப்போல்
வாந்தி பேதியால் அவதிப்பட்டு
அரசு மருத்துவமனையில் கிடந்தேன்
அரை மயக்கத்தில்

அரசு வேலைக்காக மட்டுமல்ல
அவசர வேலைக்காகவும்
வாகனம் எதிர்பார்த்துக்
காத்திருந்ததில்
அவர்களைப்போல் எனக்கும்
கடுவலி கொடுக்கிறது கால்

நான் மட்டும் உடுத்த வேண்டி
உலகில் யாரும்
தனியாக தறிபோடவில்லை

தரை முழுக்க நனைத்த
மழைகூட - என்னைத்
தனிமைப்படுத்தவில்லை

அதி உச்சபட்சமாக
அரை மணிநேரம்
அவர்களைப்போல்
என்னாலும் முடியும்
மூச்சடக்க

மற்றவர்களைப்போலவே
ஒரு கோப்பைக்கு மேல்
திகட்டுகிறது தேநீரும்

எல்லோர் போலவும்தான்
எல்லா சுவைகளும்
எல்லைக்குள் இருக்கின்றன
எனக்குள்ளும்

அவர்கள் செல்லும் சாலைதான்
எனக்கும்
நான் காணும் நிலாதான்
அவர்களுக்கும்

வயது முதிர்ந்தாலும்
அவர்களைப்போல் நானும்
உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்

பிறகெப்படி நான் மட்டும்
வறுமைக் கோட்டுக்குக் கீழ்

- சகா